திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்பது திராவிட இயக்கத்தினை அடித்தளமாகக் கொண்டு, அடுத்த தளங்களில் கிளை விரித்து, "நாம் ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம்” என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தொடக்கப்பட்ட இயக்கம் ஆகும். இப்பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன். இப்பேரவை 22 சனவரி 2007ஆம் ஆண்டு சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கப்பட்டது. இப்பேரவையின் மூலம் கருஞ்சட்டைத் தமிழர் என்னும் வார இதழும் திராவிட முழக்கம் எனும் மாத இதழும் வெளிவருகின்றன.
சுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன் சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். இறைமறுப்பாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர்.